கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில்(2023-24) மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் மார்ச் 27 முதல் தொடங்குகிறது. ஏப்ரல் 1, 2023க்குள் 6 வயதை எட்டிய குழந்தைகள் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஏப்ரல் 1, 2017 முதல் ஏப்ரல் 1, 2015 வரை பிறந்தவர்கள் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு சேர்க்கை ஆஃப்லைன் முறையில் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12, 2023 அன்று முடிவடையும். தற்போது நாடு முழுவதும் 1,247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் கீழ் இந்தப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. முதல் கட்ட சேர்க்கைப் பட்டியல் ஏப்ரல் 23-ம் தேதி வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து இடங்கள் காலியாக இருந்தால், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கைப் பட்டியல் முறையே ஏப்ரல் 30 மற்றும் மே 5 ஆகிய தேதிகளில் வெளியாகும்.