திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் ஜமால் முகமது கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்துள்ளார். கூட்டத்தில் 385 சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர்கள் மற்றும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர்கள் பங்கேற்று உள்ளனர்.
தமிழக முதலமைச்சர் சட்டசபையில் 78 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை அறிவித்தார். இந்த மையங்கள் 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் அமைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைவதற்கான இடம் தேர்வு குறித்த அடிப்படை தகவல்களும் இந்த கூட்டத்தில் பகிரப்படும்.
அத்துடன் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சுகாதாரப் பணிகளுக்கான திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் நல்வாழ்வுத் துறையில் 4,308 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக எம்.ஆர்.பி. இடம் அறிக்கை தரப்பட்டு ஒவ்வொரு துறையாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
237 மருந்தாளுநர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதலமைச்சர் மூலம் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1,021 மருத்துவர்களை நியமனம் செய்ய கலந்தாலோசனை நடைபெற்று வருகிறது.