கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கான கால அவகாசம் இந்த மாதம் வருகிற மார்ச் 31ம் முடிவடையும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் ஒரு வருடத்திற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை அடுத்த ஆண்டு (31.03.2024) மார்ச் 31ம் தேதி வரை இணைத்து கொள்ளலாம் என கால அவகாசம் நீட்டிப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இதற்காக 6பி படிவம் ஒன்றையும் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய வாக்காளர் சேவை அமைப்பான ‘NVSP போர்ட்டல்’, வாக்காளர் சேவை எண் மூலமாக இந்த இணைப்பை மேற்கொள்ளலாம். அல்லது, வீடு வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலரிடம் ‘6பி’ படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. மேற்கூறிய வழிகளில் மட்டுமல்லாது ‘Voter Helpline App’ என்ற செயலி (அப்ளிகேஷன்) மூலமாகவும் செல்போன் துணை கொண்டு இந்த இணைப்பு பணியை சுலபமாக மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.