தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம் – உயர்கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் தற்போது நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தங்களது சரியான மதிப்பெண் சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.  மதிப்பெண் சான்றிதழ் சரிபார்க்கப்படும் போது போலி என்று தெரிய வந்தால் மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு அவர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

கல்லூரிகளில் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு மாணவர்கள், பெற்றோர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க உயர்கல்வித்துறை ஆன்லைன் மூலம் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.  கடந்த ஜூலை 26ம் தேதி முதல் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மாணவர்களுக்கு எச்சரிக்கை:

கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள் விவரங்கள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும், இதில் முறைகேடுகள் நடந்தால் கல்லூரிகளின் சேர்க்கை குழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எக்காரணம் கொண்டும் மாணவர்களை கல்லூரிகளுக்கு வர வைத்தல் கூடாது. அனைத்து பாடப்பிரிவுகளிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளார்.