தேனியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி!

தேனியில் அண்ணா பிறந்த நாள் விழா செப்டம்பர் 15ம் தேதி நடக்க இருக்கிறது. இதையொட்டி மதிவண்டி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம் . முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு தேனி மாவட்டம் கர்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டிகள் செப்டம்பர் 15-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இந்த போட்டிகளில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ, 15 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ என்ற தூர அடிப்படையில் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்போர் தங்களது சொந்த மிதிவண்டிகளை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடிகளைக்கொண்ட மிதிவண்டிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். கியர் மிதிவண்டி மற்றும் பந்தய மிதிவண்டிகள் அனுமதிக்கப்படமாட்டாது.

போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து கண்டிப்பாக வயதுச் சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும். ஆதார் அட்டை எமிஸ் எண்ணுடன் பள்ளி அடையாள அட்டையும் கொண்டு வரவேண்டும்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 வரை இடம் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 பரிசுத்தொகையாக வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் செப்டம்பர் 15ம் தேதி கர்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையத்தில் காலை 7.15 மணிக்கு ஆஜராக வேண்டும்.

இவ்வாறு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.