ரயில்வே ஊழியர்களுக்கான பண்டிகை கால போனஸ் அறிவிப்பு!

நாட்டில் உள்ள 11 லட்சம் அரசிதழ் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை காரணமாக போனஸ் தொகை வழங்கப்பட உள்ளது. ரயில்வே வாரியத்தின் இந்த கோரிக்கையை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது.

போனஸ் அறிவிப்பு:

இந்திய ரயில்வேயில் பணிபுரியும் 11 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், தசரா பண்டிகைக்கு முன்னதாக தங்களது 78 நாள் பணிக்கான போனஸை பெற உள்ளார்கள். இந்த போனஸ் தொகையானது தொடர்சியாக 11 வது ஆண்டாக கிடைக்க உள்ளது. தகுதியுள்ள அரசிதழ் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட போனஸ் (PLB) செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியக் கணக்கீட்டு உச்சவரம்பு மாதத்திற்கு ரூ.7,000 ஆகும். அதன்படி, தகுதியான ரயில்வே ஊழியருக்கு 78 நாள் சம்பள தொகை ரூ.17,951 ஆக உள்ளது.

ரயில்வே வாரியம் 78 நாள் போனஸ் திட்டத்தை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது, மேலும் மத்திய அமைச்சரவை இந்த வாரம் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க உள்ளது. 2021-22 நிதியாண்டிற்கான போனஸ் மூலம் சுமார் 1.1 மில்லியன் அரசிதழ் அல்லாத ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இதற்காக சுமார் 2,000 கோடி ரூபாய் அரசிற்கு கூடுதல் தொகை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், வழக்கமான 78 நாள் ஊதியத்தை விட இந்த ஆண்டு கூடுதல் போனஸ் கிடைக்கும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்பார்த்தன. அதேபோல், இந்த ஆண்டு போனஸ் தொகை வாங்குவதற்கு கூடுதல் நாட்களை அரசு கணக்கிட வேண்டும் என்றும் இந்திய ரயில்வே ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.ராகவய்யா அவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார் என்பது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது.