தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை பொருட்கள்!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை பொருட்கள்: அரசு திட்டம் 

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் ரேஷன் கடைகளில் மளிகை பொருள்கள் இலவசமாக வழங்க அரசு பரிசீலனை செய்து வருவதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மளிகை தொகுப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்திற்கு அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு, தனியார் தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை, மேலும் ஆட்டோ, டாக்ஸி ஓட அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அன்றாட தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் பெரிதும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை சரி செய்ய அரசு ரூ.4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளது. மே 10 முதல் அதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் அதிகப்படியான மக்கள் ரேஷன் பொருள்களை வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் போது மளிகை பொருள்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டது.