காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை!!

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை:

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணி, தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி என்பது போன்ற பணிகளுக்காக காவல்துறையினருக்கான வார விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், மறுஉத்தரவு வரும் வரை அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்றும் தமிழக காவலர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

கொரோனா காரணத்தினால் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் நோய் தடுப்பு பணிகளிலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து பல மாதங்களாக காவல்துறையினர் விடுமுறை இல்லாமல் பணியாற்றி வருவதால் அவர்கள் மன அழுத்தம் காரணமாக சோர்வடைந்து காணப்படுகின்றனர் என்பதனை உணர்ந்த வேலூர் காவல்துறை நிர்வாகத்தினர், 2ம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர் வரை உள்ள அனைவரும் மீண்டும் வார விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

வேலூர் மாவட்ட சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து பிரிவு, மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு போன்ற பிரிவுகளில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை எடுக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.