இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டம்:

கொரோனா பரவல் காரணமாக சுமார் 2 ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் ஆன்லைன் மூலமே மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். இதன்காரணமாக மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே, மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்கவும், 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ‘இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்குப்பத்தில் இந்த புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கற்றல் செயல்பாடுகள் நடைபெறும். இத்திட்டம் காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதங்கள் தினமும் 1 மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்று கொடுப்பார்கள். இதன்மூலம் மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருக்காது என கருதப்படுகிறது.

இந்த நிகழ்வில், உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க. நந்தகுமார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!