தமிழகத்தில் NEET தேர்ச்சி விகிதம் தொடர்ந்து இந்தாண்டும் சரிவு!

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் சதவீதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுதும் ஜூலை 17ல் நடந்தது. அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுதும் 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

தேர்வு எழுதிய 17.64 லட்சம் பேரில், 9.93 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்தில் 1.17 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 1.13 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 82,548 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்த வரை 1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் சதவீதம் 51.3 ஆகும். கடந்த 2020ம் ஆண்டு 57.44 % ஆக இருந்த தேர்ச்சி விகிதம் 2021ம் ஆண்டில் 54.4% ஆக குறைந்தது. இந்த ஆண்டு 51.3 % ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையிலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

இதனால், நீட் தேர்ச்சி பட்டியலில் கடந்த ஆண்டு 23வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு 28 வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!