சத்துணவு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக அதிகரிப்பு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அமைச்சர் அறிவிப்பு:

சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவுச் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும். இதன்மூலம் தற்போது பணியிலிருக்கும் 29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன்பெறுவார்கள்.

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள், தேவைக்கேற்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்.

பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுடைய வேலைநிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணிநீக்க காலம் ஆகியவை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில், கலந்தாய்வின்போது அவர்களுக்கான உரிய முன்னுரிமை வழங்கப்படும்.

போராட்டக்காலத்தில் அவர்கள்மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும்.

அந்த ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவையும் சரிசெய்யப்படும்.

அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோரை அவர்களது வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்படும்.

கொரோனா சிகிச்சைகளைப் பொறுத்தவரையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொகையான ரூ.10 லட்சம் கூடுதலாக, கொரோனா சிகிச்சைக்கான செலவுத்தொகை அரசு நிதி உதவியின்கீழ் அனுமதிக்கப்படும்.

கணக்கு மற்றும் கருவூலத் துறையின் பணிகளை எளிதாக மேற்கொள்ளும் பொருட்டு, அவற்றைத் துரிதமாகவும், எளிதாகவும் செயல்படுத்தக்கூடிய வகையில், மாவட்டந்தோறும் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.

புதியதாக அரசுப் பணியில் சேரும் அரசுப் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு, பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்மூலம் தொலைதூரம் சென்று பயிற்சி பெறும் நிலை தவிர்க்கப்பட்டு, தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதிகாண் பருவம் முடித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!