அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..!

திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள கீழ்நாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின், காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் மதிய உணவு தரமாக வழங்கப்படுகிறதா என மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது ஒட்டுமொத்த மாணவ மாணவிகளும் மதிய உணவில் கல், முடி இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து சத்துணவு அமைப்பாளரை அழைத்து விசாரித்த மாவட்ட ஆட்சியர் உணவு தரமாக வழங்க வேண்டும் என்றும் மூட்டையிலிருந்து அப்படியே எடுத்து சமைக்கிறீர்களா எனவும் கேள்வி எழுப்பினார், மேலும், மாணவர்களிடம் தினந்தோறும் என்ன உணவு வழங்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் அமைதியாக இருந்ததால் வழங்கப்படும் அனைத்து உணவுகளும் புளி சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் என அனைத்தும் ஒரே சுவையில் இருப்பதால் மாணவர்களால் என்ன சாப்பிட்டோம் என அடையாளம் சொல்ல முடியவில்லை என நகைச்சுவையாக பேசினார்.

தொடர்ந்து சத்துணவு ஊழியரிடம் தரமாக உணவு வழங்க வேண்டும் என்றும் இரண்டு நாட்களில் மீண்டும் ஆய்வு செய்வேன் என்றும் எச்சரித்து சென்றார். அதேபோன்று கீழ்நாத்தூர் அரசு நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், நியாயவிலைக் கடையில் அரிசி கீழே சிந்தி கிடப்பதை பார்வையிட்டு, அரிசி மூட்டைகளில் இருந்த அரிசியை தரமாக பொது மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கீழே சிந்தி கிடக்கும் அரிசி எவ்வளவு எடை உள்ளது என்று கணக்கெடுத்து, கடை ஊழியரிடம் அபராதம் விதித்து வசூலிக்க வேண்டும் என்று வட்ட வழங்கல் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!