தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் முன்களப் பணியாளர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு காலத்திலும் ஓய்வில்லாமல் பணிபுரிந்து வரும் மின்சார வாரிய ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பணியாளர்கள்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மே 31 வரை தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இருந்த போதிலும் மின்சார வாரிய பணியாளர்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் முதல்வரிடம் கோரிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில்,”வேளாண் வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புகள் உருவாகுவதற்கும், பொருளாதார வளர்சிக்கும், இன்றியமையாததாக விளங்குவது, மாறி வரும் இன்றைய நவீன வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் மின்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய முக்கியமான மின்சார வாரியத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

எனவே மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்ததை போல மின்சார வாரிய பணியாளர்களை அறிவிக்க வேண்டும். அதற்குரிய சலுகைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை வைத்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இயற்கை எய்தும் மின்வாரிய பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதே போல தமிழகத்தில் பணிபுரிந்து வரும் மின்சார ஊழியர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.