விரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்..!

மாநிலம் முழுவதும் அண்மையில் நடைபெற்று  முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை (பிரிலிம்ஸ்) தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வை கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு (சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது) என மூன்று நிலைகளில் தெரிவு முறை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

குரூப் 2/2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுற்று மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பை தேர்வாணையம் முன்னதாக வெளியிட்டிருந்தது. அதில், நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், அக்டோபர் மாத இறுதிக்குள் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்றும், பொறியியல் சேவை பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

எனவே, இன்றிலிருந்து எப்போது வேண்டுமானாலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தை அவ்வப்போது பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.